விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும்- சோயிப் அக்தர் விருப்பம்


விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும்- சோயிப் அக்தர் விருப்பம்
x

Image Courtesy: AFP  

கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் விராட் கோலியை பாராட்டி வருகிறது. குறிப்பாக அவரது ரசிகர்கள் கோலியின் ஆட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி டாப்-10க்குள் மீண்டும் நுழைந்து உச்சம் கண்டுள்ளார்.

அதன்படி ஐசிசி இன்று வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15வது இடத்தில் இருந்த விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635 ரேட்டிங் புள்ளி) முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

கோலி குறித்து அக்தர் பேசுகையில், " விராட் கோலி தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய இன்னிங்ஸை விளையாடி உள்ளார். தன்னம்பிக்கை அதிகமாக இருந்ததால் தான் அவரால் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாட முடிந்தது.

ஆனால் கோலி அவருடைய முழு ஆற்றலையும் டி20 கிரிக்கெட்டுக்கு செலவிடுவதை நான் விரும்பவில்லை. இதே போன்ற உத்வேகத்தை பயன்படுத்தி கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் 3 சதங்கள் அடித்திருக்கலாம். அதனால் விராட் கோலி விரைவில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் தெரிவித்துள்ள இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Next Story