இந்த கடைசி போட்டியை உலகக்கோப்பையாக நினைத்து வெற்றியுடன் விடை பெற விரும்புகிறேன் - டீன் எல்கர்


இந்த கடைசி போட்டியை உலகக்கோப்பையாக நினைத்து வெற்றியுடன் விடை பெற விரும்புகிறேன் - டீன் எல்கர்
x

image courtesy; AFP

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டியுடன் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியின்போது பவுமா காயமடைந்ததால் டீன் எல்கர் தம்முடைய கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக்கோப்பையாக நினைத்து வெற்றியுடன் விடை பெற விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,"நான் வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேன். சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர் வெற்றிகளை மட்டுமே விரும்புகிறேன். அதுதான் நீங்கள் உங்களுடைய அணியுடன் பகிர்ந்து கொள்ளும் மகத்தான நினைவாகும். டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது. ஒருவேளை உலகக்கோப்பை பெரிய வெற்றியாக இருக்கலாம். ஆனால் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

எனவே என்னுடைய கடைசி போட்டியை உலகக்கோப்பையாக நினைத்து வெற்றியுடன் விடை பெற விரும்பு விரும்புகிறேன். முதல் போட்டியில் தோற்றதால் இத்தொடரை எப்படியும் நாங்கள் தோற்க மாட்டோம் என்ற நிலையை எட்டியுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்போட்டியில் டிரா செய்தால்தான் அது எங்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். புத்தாண்டில் நடைபெறும் இந்த போட்டி எங்களுக்கு மிக பெரியதாகும். எனவே 2 - 0 என்ற கணக்கில் வெல்வதை மட்டுமே நாங்கள் மனதில் வைத்துள்ளோமே தவிர டிரா செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை" என்று கூறினார்.


Next Story