ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா முன்னேற்றம்


ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா முன்னேற்றம்
x

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

துபாய்,

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் சுப்மன் கில் 5-வது இடத்திலும், விராட்கோலி 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 4 இடங்கள் உயர்ந்து 51-வது இடத்தை எட்டியுள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முதலிடத்தில் மாற்றமின்றி தொடருகிறார். டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து) 2-வது இடத்திலும், முகமது சிராஜ் (இந்தியா) 3-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை பெற்றுள்ளார்.

20 ஓவர் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் 3 இடங்கள் ஏற்றம் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 2-ல் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். முதலிடத்தில் இருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 2-வது இடத்துக்கு சரிந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி 12 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 3-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.


Next Story