ஐ.சி.பி.எல். கிரிக்கெட்: தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்
ஐ.சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,
கட்டுமான பொறியாளர்களுக்கான இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐ.சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பெபில் சிட்டி மைதானத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் கிங்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தஞ்சாவூர் அணி வீரர் என். அரவிந்தன் தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதை சதீஷ்குமாரும் (தஞ்சாவூர் அணி), சிறந்த பந்து வீச்சாளர் விருதை சந்திரமோகனும் (மதுரை அணி) பெற்றனர். 12 ஓவர்கள் கொண்ட இந்த டென்னிஸ் பந்து போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பார்த்தசாரதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சிவில் என்ஜினீயர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், ரவி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.