அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது - விராட் கோலி பகிர்ந்த தகவல்


அவர் இல்லையென்றால்  நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது - விராட் கோலி பகிர்ந்த தகவல்
x

 image courtesy: AFP

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, "எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய எமர்ஜிங் அணி ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அந்த தொடரில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த தொடரின் பாதியில் அணிக்கு வந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றார்.

அப்படி பொறுப்பேற்றதும் வலைப்பயிற்சியில் விளையாடிய என்னுடைய ஆட்டத்தை பார்த்து அப்போதைய பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவிடம் ஏன் இவரை விளையாட வைக்கவில்லை? என்று கேட்டார். உடனே அவரும் ரகானே தொடக்க வீரராக விளையாடுவதால் நான் மிடில் ஆர்டர் களமிறக்கப்பட்டு பின்னர் என்னை இறக்குவதற்கான இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

அப்போது ரெய்னாதான் நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினார். உடனே பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து துவக்க வீரராக விளையாடுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் எங்கு இடம் கிடைத்தாலும் விளையாடுவேன் என்று கூறினேன். பிறகு உடனே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சதம் அடித்ததும் எனக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது" என்று கூறினார்.

1 More update

Next Story