'உங்களை பிளாக் செய்துவிட்டேன் என நினைத்தேன்...!' - கிண்டல் செய்ய நினைத்தவரை கிண்டல் செய்த அஸ்வின்


உங்களை பிளாக் செய்துவிட்டேன் என நினைத்தேன்...! - கிண்டல் செய்ய நினைத்தவரை கிண்டல் செய்த அஸ்வின்
x

இந்தியா கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் நீங்கள் இருவரும் என்ன செய்வீர்கள் என்று நினைத்துப்பாருங்கள் என்று அஸ்வின் கேள்வி எழுப்பினார்.

இந்தியா - வங்காளதேசம் இடையேயான 2-வது கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி 62 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரவிசந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இதனிடையே, ஆட்ட நாயகன் விருது பெற்ற கோப்பையுடன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து, சிறப்பான விளையாட்டு, நினைவில் இருக்கும் வெற்றி' என்று பதிவிட்டிருந்தார்.

அஸ்வினின் அந்த பதிவை மேற்கொள் காட்டி இலங்கையை சேர்ந்த நிப்ராஸ் ரம்சான் தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் இந்த கோப்பையை உங்கள் கேட்சை தவறவிட்ட மொனிநுல் ஹக்யுவிடம் கொடுக்க வேண்டும். அந்த கேட்சை அவர் பிடித்திருந்தால் இந்தியா நிச்சயம் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும் அஸ்வின்' என்று அஸ்வினை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

அஸ்வினை கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருந்த அந்த டுவிட்டர் பதிவிற்கு அஸ்வின் தனது பாணியில் பதில் டுவிட் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த நிப்ராஸ் ரம்சானின் டுவிட்டை மேற்கோள் காட்டி பதில் அளித்துள்ள அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஓ..இல்லை... உங்களை நான் பிளாக் செய்துவிட்டேன் என்று நினைத்தேன்... ஓ... மன்னித்துவிடுங்கள் அது மற்றொரு நபர். அவரது பெயர் என்ன? ஆம்... டேனியல் அலெக்சாண்டர் என்பது தான் அவரது பெயர்...! இந்தியா கிரிக்கெட் விளையாடவில்லையென்றல் நீங்கள் 2 பேரும் என்ன செய்வீர்கள் என்று நினைத்துப்பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

தன்னை கிண்டல் செய்ய முயன்ற இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகருக்கு அஸ்வின் அவரது பாணியில் கிண்டலடித்து பதிலடி கொடுத்துள்ள டுவிட் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.




1 More update

Next Story