வெளிநாட்டு டி20 தொடர்களில் இளம் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்- கும்ப்ளே


வெளிநாட்டு டி20 தொடர்களில் இளம் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்- கும்ப்ளே
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 11 Nov 2022 2:09 PM GMT (Updated: 11 Nov 2022 2:11 PM GMT)

மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் அந்த அனுபவம் ஐசிசி தொடர்களில் பெரிதும் உதவுகிறது.

மும்பை,

இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நமது வீரர்களை அனுமதிப்பதில்லை. இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாட விரும்பினாலும் இந்திய கிரிக்கெட்டிலிருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும்.

மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் அந்த அனுபவம் அவர்களுக்கு அனைத்து ஐசிசி தொடர்களில் பெரிதும் உதவுகிறது. அதே போல் இந்திய மண்ணில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவங்களை கொண்டு வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவில் இருதரப்பு தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

இதனால் இந்திய வீரர்களையும் வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய கும்ப்ளே கூறுகையில், " எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் கைகொடுக்கவே செய்யும். இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எப்படி வித்திட்டது என்பதை பார்த்திருக்கிறோம்.

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதாலும் இந்திய வீரர்கள் பயனடைந்துள்ளனர். எந்த வகையான கிரிக்கெட்டை விளையாடப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும் போது அதற்குரிய இளம் வீரர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களுக்கு வெளிநாட்டு லீக் அனுபவங்கள் கிடைத்தால் அது சிறந்ததாக இருக்கும். இளம் வீரர்களுக்கு நிறைய ஆடும் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் உதவவே செய்யும்" என்றார். கும்ப்ளே-வின் இந்த யோசனையை பிசிசிஐ பரிசீலிக்குமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story