இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு அவர் தேவை - இந்திய வீரரை பாராட்டிய பிலாண்டர்


இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு அவர் தேவை - இந்திய வீரரை பாராட்டிய பிலாண்டர்
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளின் ஐசிசி தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராதான் தற்சமயத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய முழுமையான பவுலராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் வெர்னோன் பிலாண்டர் பாராட்டியுள்ளார்.

மேலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி தெறிக்க விடும் பும்ரா 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அணியில் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் பந்துகளை மட்டுமே வீச முயற்சித்ததால் ரன்களை வாரி வழங்கிய அவர் தற்போது பாடத்தை கற்றுக்கொண்டு முன்னேறியுள்ளார். புதிய பந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு தேவை.

அந்த தொடரில் அவர் வெற்றியில் பெரிய பங்காற்றுவார் என்று நான் கருதுகிறேன். தற்சமயத்தில் பும்ரா ஆதிக்கம் செலுத்தும் விதத்தை பார்ப்பது நன்றாக இருக்கிறது. பிளாட்டான பிட்சுகளை கொண்ட இந்திய மைதானங்களில் நிறைய விளையாடிய அவர் கடினமான தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் தன்னை உட்படுத்திக்கொண்டு அசத்தினார்" என்று கூறினார்.


Next Story