முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்...!
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கவுகாத்தி.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் 2 ரன்னிலும், ராஜ்கோட்டில் நடந்த கடைசி ஆட்டத்தில் 91 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை 16 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதே போல முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. லோகேஷ் ராகுலும் திரும்பி உள்ளார். இந்திய அணி கடைசியாக வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்நாட்டில் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
20 ஓவர் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி வீரர்கள் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் மோதிய 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இரு அணிகளும் நாளை மோதுவது 162-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 162 ஆட்டத்தில் இந்தியா 93-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 போட்டி முடிவு இல்லை.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி மோதிய போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பயணத்தில் இந்தியா முதல் 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.
நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், அர்ஷ்தீப்சிங், யுசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், முகமது ஷமி.
இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டீஸ் (துணை கேப்டன்), அசலென்கா, பண்டாரா, தனஞ்செய டி சில்வா, ஹசரங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, நுவன் பெர்னாண்டோ, கருணாரத்னே, லகிரு குமாரா, மதுஷனகா, நிஷங்கா, பிரமோத் மதுஷான், கசுன் ரஜிதா, சமர விக்ரமா, தீக்சனா, வான்டர்சே, துனித்.