ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபாரவெற்றி..! அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது


ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபாரவெற்றி..! அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது
x

இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன.

இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது குரூப்பில் முதல் இடத்துக்கு முன்னேறி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள நினைக்கும். ஒருவேளை இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் குரூப் 2ல் 2வது இடத்துக்கு சரிந்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 26 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில்6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரரான மதவரா முதல் பந்தில் டக் அவுட் ஆனார். சக்கப்வாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் எர்வின் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது.

சிக்கந்தர் ராசா 34 ரன்களும், ரியான் பர்ல் அதிகபட்சமாக 35 ரன்களும் எடுத்தனர். ஆனால் கடைசி வரையில் ஜிம்பாப்வே அணியால் வெற்றி இலக்கிற்கு அருகில் கூட வர முடியவில்லை.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

இதன் மூலம் இந்திய அணி குரூப்1 பிரிவில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி ஆட்டத்தில் வரும் வியாழக்கிழமை மோத உள்ளது.


Next Story