இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் பயணம்: 10 போட்டிகளில் ஆடுகிறது


இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் பயணம்: 10 போட்டிகளில் ஆடுகிறது
x

கோப்புப்படம் 

அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு டெஸ்ட், ஒரு நாள் போட்டி உள்பட 10 போட்டிகளில் விளையாடுகிறது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. ஒரு நாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்டு 1-ந்தேதிகளில் நடக்கிறது. 20 ஓவர் தொடரில் முதல் 3 ஆட்டங்கள் ஆகஸ்டு 3, 6, 8-ந்தேதிகளில் வெஸ்ட் இண்டீசிலும், எஞ்சிய இரு ஆட்டங்கள் 12, 13-ந்தேதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லிலும் நடத்தப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த இருப்பதால் அதை கருத்தில் கொண்டு இந்திய அணி அமெரிக்காவிலும் கால்பதிக்கிறது.

100-வது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், 'இந்த தொடரின் முக்கிய அம்சமாக குயின்ஸ் ஓவல் பார்க்கில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி அந்த மைதானத்தில் நடைபெறும் 100-வது டெஸ்டாகும். பெருமைமிக்க இரு கிரிக்கெட் தேசங்கள் இடையிலான மோதலுடன் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடப்போகிறோம். இதே போல் வெள்ளைநிற பந்து கிரிக்கெட் போட்டியையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் 18 நாட்கள் போட்டியை உற்சாகமாக கண்டு ரசிப்பார்கள்' என்றார்.

டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக 8 முறை வென்று இருக்கிறது. அந்த ஆதிக்கம் இந்த முறையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்திய அணி ஜொலிக்காவிட்டாலும் இப்போதைக்கு ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து இல்லை. தனிப்பட்ட முறையில் அவர் ஓய்வு எதுவும் கேட்காத பட்சத்தில் அவரே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக நீடிப்பார் என்று தெரிகிறது. ஆனால் அதன் பிறகு அவரது டெஸ்ட் கேப்டன்ஷிப் எதிர்காலம் குறித்து தேர்வு குழுவினர் கலந்தாலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது அடிப்படை ஆதாரமற்ற பொருள். 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2025-ம் ஆண்டில் நிறைவடையும் போது கிட்டத்தட்ட ரோகித்சர்மா 38 வயதை நெருங்கி விடுவார். இப்போதைக்கு தேர்வு குழுவினர் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு டிசம்பர் 2-வது வாரம் வரை டெஸ்ட் போட்டிகள் எதுவும் கிடையாது. அதாவது டிசம்பர் பிற்பகுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. எனவே டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க தேர்வாளர்களுக்கு போதுமான அவகாசம் இருக்கிறது. அதற்குள் 5-வது தேர்வாளரும் (புதிய சேர்மன்) தேர்வு கமிட்டியில் இணைந்து விடுவார்.

விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போது, பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா முதலில் தயங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உடல் ஒத்துழைக்குமா என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது. அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் அவரை சமாதானப்படுத்தினர்' என்றார்.


Next Story