'இந்திய அணியை தோற்கடிப்பது கடினம்'- ரிக்கி பாண்டிங் பேட்டி


இந்திய அணியை தோற்கடிப்பது கடினம்- ரிக்கி பாண்டிங் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2023 9:30 PM GMT (Updated: 18 Oct 2023 1:10 AM GMT)

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

பாண்டிங் பேட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணிக்கு சாதகமான அம்சமே கேப்டன் ரோகித் சர்மா தான். அவர் எப்போதும் இயல்பாக இருக்கிறார். எல்லா விஷயங்களையும் பதற்றமின்றி செய்கிறார். அவர் பேட்டிங் செய்யும் போது கூட இதை நீங்கள் பார்க்கலாம். ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் விதத்திலும் இந்த குணத்தை காணலாம்.

விராட் கோலி போன்ற வீரர்களை எடுத்துக் கொண்டால், அவர் கொஞ்சம் உணர்வு பூர்வமானவர். ரசிகர்களின் பேச்சுக்கு செவி சாய்த்து அதற்கு ஏற்ப ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். இது போன்ற குணம் கொண்ட ஒருவர் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளிப்பதை சற்று கடினமாக கருதலாம். ஆனால் ரோகித் சர்மா இதில் நன்றாக இருக்கிறார். அவர் உன்னதமான ஒரு நபர். இந்திய அணியின் சிறந்த வீரராக நீண்ட காலமாக செயல்படுகிறார். மேலும் கேப்டனாக இந்திய அணிக்கு மிகச்சிறந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்.

நெருக்கடியை சமாளிப்பார்கள்

உள்ளுர் ரசிகர்களின் முன் விளையாடும் போது ஏதாவது ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி வராது என்றோ அது அவர்களை பாதிக்காது என்றோ நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த தொடரின் மகிமையே அது தான். இருப்பினும் நெருக்கடியை ரோகித் சர்மா திறம்பட கையாளுவார் என்று நினைக்கிறேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்த மற்ற அணிகள் சிரமப்படுவார்கள் என்று சொல்லி வருகிறேன். ஏனெனில் அவர்களிடம் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங்கில் டாப் வரிசை, மிடில் வரிசை என அனைத்தும் கனகச்சிதமாக இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது. எனவே அவர்களை வீழ்த்துவது நிச்சயம் எதிரணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதே சமயம் அதிகப்படியான அழுத்தம் கொண்ட போட்டிகளில் அவர்கள் எப்படி தங்களை வலுவாக நிலைநிறுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.


Next Story