ஐ.ஓ.சி. வாக்கெடுப்பில் அமோக ஆதரவு: கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்ப்பு.! அதிகாரபூர்வ அறிவிப்பு


ஐ.ஓ.சி. வாக்கெடுப்பில் அமோக ஆதரவு: கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்ப்பு.! அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2023 3:30 AM IST (Updated: 17 Oct 2023 3:31 AM IST)
t-max-icont-min-icon

2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

வாக்கெடுப்பில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு

34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் (இருபாலருக்கும் 20 ஓவர்), ஸ்குவாஷ், பேஸ்பால்-சாப்ட்பால் மற்றும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளை புதிதாக சேர்க்க லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்தது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் ஐ.ஓ.சி.யின் 141-வது கூட்டத்தில் மேற்கண்ட 5 விளையாட்டுகளை சேர்ப்பது தொடர்பாக உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்களில் 2 பேர் மட்டுமே எதிராக கையை உயர்த்தினர். மற்ற அனைவரும் இந்த விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க ஒருமித்த ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து 5 விளையாட்டுகளும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக ஐ.ஓ.சி.யின் தலைவர் தாமஸ் பேச் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் ஸ்குவாஷ் மற்றும் பிளாக் கால்பந்து ஒலிம்பிக்கில் முதல்முறையாக அறிமுகமாகின்றன. மற்ற விளையாட்டுகள் ஏற்கனவே ஒலிம்பிக்கில் அங்கம் வகித்து இருக்கின்றன.

கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றிருந்தது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது.

லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி, 6 அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்டை நடத்தலாம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அணிகளின் எண்ணிக்கை, தகுதி சுற்று உள்ளிட்டவை குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியும் காரணம்

ஓட்டெடுப்புக்கு முன்பாக லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியின் இயக்குனரும், துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம் வென்றவருமான நிகோலோ கேம்பிரியானி பேசுகையில், 'உலகம் முழுவதும் 250 கோடி ரசிகர்களுடன் சர்வதேச அளவில் 2-வது பிரபலமான விளையாட்டாக விளங்கும் கிரிக்கெட்டை ஒலிம்பிக் வளையத்திற்குள் வரவேற்பது திரில்லிங்காக இருக்கிறது. லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதில் உங்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. அத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் முன்னோடியாக இருக்கும் கிரிக்கெட்டை அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனது நண்பர் விராட் கோலி இங்கு (இந்திய கிரிக்கெட் வீரர்) இருக்கிறார். சமூக வலைதளத்தில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 34 கோடியாகும். இந்த எண்ணிக்கை லி பிரோன் ஜேம்ஸ், டாம் பிராடி, டைகர் வுட்ஸ் ஆகிய பிரபலங்களை பின்தொடர்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இதுவும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கு ஒரு காரணம்' என்றார்.

காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு ஆகியவற்றை தொடர்ந்து ஒலிம்பிக்குக்கும் கிரிக்கெட் போட்டி திரும்புவது வீரர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நீத்தா அம்பானி பூரிப்பு

ஐ.ஓ.சி. உறுப்பினரும், தொழிலதிபருமான நீத்தா அம்பானி கூறுகையில், 'ஐ.ஓ.சி. உறுப்பினராக, கிரிக்கெட்டின் தீவிர ரசிகையாக, பெருமைமிக்க இந்தியராக கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும். உலகம் முழுவதும் அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் திகழ்கிறது. அதிக பேர் பார்க்கும் விளையாட்டில் 2-வதுஇடத்தில் இருக்கிறது. 140 கோடி இந்தியர்களுக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல. ஒரு மதம் போன்று பின்னி பிணைந்துள்ளது.' என்றார்.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறுகையில், 'ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்திருப்பதன் மூலம் புதிய எல்லைகள் திறக்கப்படுகிறது. உலக அரங்கில் கிரிக்கெட் வணிகத்தை இதுவரை பயன்படுத்தாத நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு இது ஈடுஇணையற்ற ஒரு வாய்ப்பாக அமையும்' என்றார்.

நிரந்தர இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் கிரேக் பார்கிளே கூறுகையில், 'உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருப்பதால் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி அடையும். உலக அளவில் குழு போட்டியில் வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ள போட்டிகளில் கிரிக்கெட்டும் ஒன்று. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டுமின்றி வருங்காலங்களிலும் ஒலிம்பிக் விளையாட்டு திட்டத்தில் கிரிக்கெட் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார்.

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைத்திருப்பதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடப்பதால் அதிலும் கிரிக்கெட் இடம் பெறுவதில் சிக்கல் இருக்காது.


Next Story