ஐ.பி.எல். 2024: மார்க்ரம் இல்லை.... புதிய கேப்டனை நியமித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்


ஐ.பி.எல். 2024: மார்க்ரம் இல்லை.... புதிய கேப்டனை நியமித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
x

image courtesy; AFP

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டார்.

ஐதராபாத்,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் வரும் 23-ம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச தொகையான ரூ. 20.50 கோடிக்கு வாங்கியது.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் மார்க்ரம் செயல்பட்டார்.


Next Story