பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்: 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி- யாருக்கு வாய்ப்பு அதிகம்.?


பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்: 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி- யாருக்கு வாய்ப்பு அதிகம்.?
x

பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை,

ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் இன்னும் 4 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றை உறுதிபடுத்தியுள்ளது.

டெல்லி, ஐதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் வெளியேறிவிட்டன. மீதம் உள்ள 6 அணிகள் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கின்றன. 2,3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்கு இந்த 6 அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய சூழலில், சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளும் தங்களுடைய கடைசி போட்டியில் வெற்றிபெற்றாலே போதும். அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஒருவேளை இரு அணிகளும் தோற்றாலும் கூட, மும்பை அணி ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோற்றால், சென்னை, லக்னோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

பெங்களூரு அணியை பொருத்தவரை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி கடைசி லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மும்பை ஒருவேளை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் போதும். ஏனென்றால் மும்பையை விட பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது.

லீக் போட்டிகள் அனைத்தையும் விளையாடி முடித்துள்ள ராஜஸ்தான் அணி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அணிக்கும் தற்போது வரை வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை மற்றும் பெங்களூரு அணி தனது கடைசி போட்டிகளில் தோற்க வேண்டும். ( பெங்களூரு அணி 5க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும்)

அவ்வாறு நிகழ்ந்தால், ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.


Next Story