ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் வெற்றிக்காக டெல்லி-மும்பை அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் வெற்றிக்காக டெல்லி-மும்பை அணிகள்  இன்று மோதல்
x
தினத்தந்தி 11 April 2023 5:22 AM IST (Updated: 11 April 2023 6:12 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் வெற்றிக்காக டெல்லி-மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.

புதுடெல்லி,

மும்பை-டெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத அணிகள் இவை இரண்டும் தான். அதனால் முதல் வெற்றிக்காக கோதாவில் குதிக்கின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும் தோல்வியை தழுவியது.

இரு ஆட்டங்களிலும் மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இன்னும் முழுமையான அதிரடியை காட்டவில்லை. ரூ.17½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் சோபிக்கவில்லை. இதே போல் சூர்யகுமார் யாதவின் மோசமான பார்ம் தொடருகிறது. இரு ஆட்டத்தில் 15, 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே மும்பையால் எழுச்சி பெற முடியும். வலது முழங்கை காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான்.

திணறும் பிரித்வி ஷா

இதே நிலைமையில் தான் டெல்லி கேப்பிட்டல்சும் பரிதவிக்கிறது. லக்னோ, குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. டெல்லி அணியில் கேப்டன் வார்னர் (56, 37 மற்றும் 65 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. வார்னர் கூட பெரிய அளவில் அதிரடியாக (ஸ்டிரைக் ரேட் 117.03) விளையாடவில்லை. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா வேகப்பந்து வீச்சில் தடுமாறுவது (12, 7 மற்றும் 0) பின்னடைவாக அமைந்துள்ளது. ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்காக தாயகம் சென்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. உள்ளூரில் ஆடுவது டெல்லிக்கு சற்று சாதகமாக இருக்கலாம். ஏறக்குறைய சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15-ல் டெல்லியும், 17-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹிருத்திக் ஷோகீன், பியுஷ் சாவ்லா, ஜாசன் பெரன்டோர்ப், சந்தீப் வாரியர்.

டெல்லி: பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது சர்ப்ராஸ் கான், ரிலீ ரோசவ், லலித் யாதவ், அக்ஷர் பட்டேல், ரோமன் பவெல், அபிஷேக் போரெல், குல்தீவ் யாதவ், அன்ரிச் நோர்டியா, முகேஷ் குமார் அல்லது சேத்தன் சகாரியா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக பார்க்கலாம்.


Next Story