ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ-மும்பை இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ-மும்பை இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ-மும்பை அணிகள் இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றை எட்டின. இந்த நிலையில் இன்றிரவு (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி காணும் அணி ஆமதாபாத்தில் 26-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் குஜராத்தை எதிர்த்து விளையாடும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும்.

குருணல் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லீக் சுற்றில் 8-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. அந்த அணியில் பேட்டிங்கில் மார்கஸ் ஸ்டோனிஸ் (3 அரைசதம் உள்பட 368 ரன்கள்) நிகோலஸ் பூரன் (358 ரன்கள்), கைல் மேயர்ஸ் (361 ரன்கள்), ஆயுஷ் பதோனியும், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் (16 விக்கெட்), யாஷ் தாக்குர், குருணல் பாண்ட்யா, அவேஷ் கான், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ராவும் வலுசேர்க்கிறார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி தொடர்ந்து 2-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. கடந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டை விட்ட லக்னோ அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தடையை வெற்றிகரமாக கடக்கும் வியூகங்களுடன் ஆயத்தமாகி வருகிறது.

வலுவான மும்பை அணி

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் 8-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை அணி 10-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. கடைசி லீக்கில் பெங்களூரு அணி, குஜராத்திடம் வீழந்ததால் மும்பை அணிக்கு இந்த வாய்ப்பு கனிந்தது.

தொடரின் ஆரம்பத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாறிய மும்பை அணி தற்போது நல்ல நிலையை எட்டி இருக்கிறது. சூர்யகுமார் யாதவை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் பார்முக்கு திரும்பி இருப்பதால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் பலமடைந்துள்ளது. அத்துடன் இந்த சீசனில் மும்பை அணி 6 முறை 200-க்கு மேல் ரன் குவித்து பிரமிக்க வைத்து இருக்கிறது. இதில் 4 தடவை 200-க்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டிபிடித்ததும் அடங்கும்.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 511 ரன்கள்), இஷான் கிஷன் (439 ரன்கள்), கேமரூன் கிரீன் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 381 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மாவும் (313 ரன்கள்), பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா (20 விக்கெட்), பெரன்டோர்ப், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

லக்னோ அணி தனது சொந்த மண்ணில் நடந்த மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க மும்பை அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த வரிந்து கட்டும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இந்த மூன்று ஆட்டங்களிலும் லக்னோ அணியே வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கரண் ஷர்மா, குயின்டான் டி காக், குருணல் பாண்ட்யா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, பிரேராக் மன்கட், கே.கவுதம், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர், மொசின் கான்.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோகித் சர்மா (கேப்டன்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், குமார் கார்த்திகேயா அல்லது ஹிருத்திக் ஷோகீன், ஆகாஷ் மத்வால்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story