ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? - இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? - இன்று மோதல்
x

கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் 2 முறையும், 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு ஒரு அணி குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் (பஞ்சாப்புக்கு எதிராக) மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற 6 ஆட்டங்களிலும் தோல்வி மயம் தான். எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் 'பிளே-ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இனி ஒவ்வொரு ஆட்டமும் பெங்களூருவுக்கு வாழ்வா-சாவா? போன்றது.

முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு அணி 262 ரன் வரை எடுத்து போராடி தோற்றது. பெங்களூரு அணியில் பேட்டிங் நன்றாக உள்ளது. ஆரஞ்சு நிற தொப்பியை வைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 361 ரன்) அந்த அணியில் உள்ளார். ஆனாலும் அணி தகிடுதத்தம் போடுகிறது. காரணம், அந்த அணியில் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. நடப்பு தொடரில் 14 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் ஒருவர் கூட இன்னிங்சில் 3 விக்கெட் எடுக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், கேமரூன் கிரீனும் சோபிக்கவில்லை. பார்ம் இன்றி தவிக்கும் மேக்ஸ்வெல் சில ஆட்டங்களுக்கு ஓய்வு கேட்டு ஒதுங்கியுள்ளார். பின்வரிசையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் (18 சிக்சருடன் 226 ரன்) பிரமாதமாக உள்ளது. எனவே பந்து வீச்சிலும் மிரட்டினால், சரிவில் இருந்து மீளலாம். ஏற்கனவே கொல்கத்தாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியுள்ள பெங்களூரு அணி, இப்போது அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்சை எடுத்துக் கொண்டால் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. ராஜஸ்தானுக்கு எதிராக இங்கு நடந்த கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணி சுனில் நரினின் சதத்தோடு 223 ரன் குவித்த போதிலும், கடைசி பந்தில் வெற்றியை கோட்டை விட்டது. நரினுடன், பில் சால்ட், ரகுவன்ஷி, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரஸ்செல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார்கள். பந்து வீச்சில் தான் ஏற்றம் தேவையாகும். குறிப்பாக ரூ.24¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (6 ஆட்டத்தில் 5 விக்கெட்) தொடக்கத்தில் 'கைவரிசை' காட்டினால் அந்த அணி இன்னும் வலுவடையும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு அனுகூலமாக இருக்கும்.

ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகளும் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் பெங்களுருவும், 19-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ரமன்தீப்சிங் அல்லது வைபவ் ஆரோரா, மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், சவுரவ் சவுகான், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ரவாத், விஜய்குமார் வைஷாக் அல்லது முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, லோக்கி பெர்குசன்.

மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் சந்திப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடக்கும் இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் (ஐதராபாத், ராஜஸ்தான், மும்பைக்கு எதிராக) வரிசையாக தோற்றது. காணாக்குறைக்கு கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக சாம் கர்ரன் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். அந்த அணியில் முன்வரிசை பேட்டிங் அவ்வப்போது சொதப்புகிறது. பின்வரிசையில் ஷசாங் சிங், அஷூதோஸ் ஷர்மா கலக்குகிறார்கள். எனவே டாப் வரிசையில் பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் ஒருசேர ஜொலித்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் முக்கியம் என்பதால் பஞ்சாப் வீரர்கள் முழுவீச்சில் களத்தில் போராடுவார்கள் என்று நம்பலாம்.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. கேப்டன் கில், சாய் சுதர்சன், சஹா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித்கான், மொகித் ஷர்மா என்று நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள குஜராத் அணி கடைசியாக உள்ளூரில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 89 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த மோசமான தோல்வியில் இருந்து விடுபட்டு எழுச்சி பெறும் முனைப்புடன் குஜராத் தயாராகிறது. குஜராத் - பஞ்சாப் அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் மோதி, தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளன.


Next Story