ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்..!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்,
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து அடுத்த ஐபிஎல் தொடருக்காக தற்போதே அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது அணியை மறுகட்டமைப்பு செய்து வருகின்றன.
அந்த வகையில் பெங்களூரு அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆண்டி பிளெவரை தலைமை பயிற்சியாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தங்கள் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது.
ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரையன் லாராவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த டேனியல் வெட்டோரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமை பயிற்சியாளரின் கீழ் ஐதராபாத் அணி எவ்வாறு செயல்பட உள்ளது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐதராபாத் அணி கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.