ஐ.பி.எல்: 213 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து லக்னோ வெற்றி- பெங்களூரு வீரர்களின் அதிரடி வீண்.!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 213 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து லக்னோ அணி திரில் வெற்றியை பெற்றது.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 213 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து லக்னோ அணி திரில் வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவு அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
கோலி அரைசதம்
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து விராட் கோலியும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும் பெங்களூரு அணியின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு சொர்க்கமாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் கோலி ஆரம்பம் முதலே தடாலடியாக மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தினார். அதிவேக பவுலர் மார்க்வுட்டின் பந்துவீச்சில் சர்வசாதாரணமாக சிக்சர், பவுண்டரி ஓட விட்டார். 35 பந்துகளில் தனது 46-வது அரைசதத்தை நிறைவு செய்த கோலி 61 ரன்களில் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். கோலி- பிளிஸ்சிஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் (11.3 ஓவர்) திரட்டியது.
பிளிஸ்சிஸ் மெகா சிக்சர்
அடுத்து பிளிஸ்சிஸ்சுடன், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் கைகோர்த்தார். கோலி வெளியேறியதும் ரன்வேட்டை பொறுப்பை எடுத்துக்கொண்ட பிளிஸ்சிஸ் லக்னோ பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார். ரவி பிஷ்னோயின் சுழலில் இரு மெகா சிக்சர் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதில் ஒரு பந்து 115 மீட்டர் தூரத்திற்கு மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது. இந்த சீசனில் இமாலய சிக்சர் இது தான். மேக்ஸ்வெல்லும் லக்னோவின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். சிக்சர் மழை பொழிந்த அவர் 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் லக்னோ கேப்டன் ராகுல் விழிபிதுங்கிப் போனார். பெங்களூரு அணி இந்த சீசனில் முதல்முறையாக 200-ஐ தாண்டியது. மேக்ஸ்வெல் 59 ரன்களில் (29 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி ஓவரில் கிளீன் போல்டானார்.
213 ரன் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. பிளிஸ்சிஸ் 79 ரன்களுடனும் (46 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் அந்த அணிக்கு 12 ரன் கிடைத்தது. கடைசி 7 ஓவர்களில் மட்டும் அவர்கள் 108 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெங்களூரு அணியில் டாப்-3 வீரர்களும் அரைசதம் அடித்தது ஒரு சாதனையாகும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் முதல் 3 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 5-வது நிகழ்வாகும்.
பின்னர் 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோவுக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கைல் மேயர்ஸ் (0), தீபக் ஹூடா (9 ரன்), குருணல் பாண்ட்யா (0) ஆகியோர் பெங்களூருவின் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர். அப்போது லக்னோ 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (4 ஓவர்) இழந்து தள்ளாடியது.
ஸ்டோனிஸ்-பூரன் சரவெடி
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் லோகேஷ் ராகுலும், ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்தனர். ராகுல் தடுப்பாட்டத்தில் ஈடுபட, ஸ்டோனிஸ் பந்தை எல்லா பக்கமும் தெறிக்க விட்டார். அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய ஸ்டோனிஸ் 65 ரன்கள் (30 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டார். அவரைத் தொடர்ந்து ராகுல் (18 ரன்) பெவிலியன் திரும்பினார்.
6-வது வரிசையில் நுழைந்த விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனும் கைவரிசை காட்ட, ஸ்கோர் மின்னல்வேகத்தில் எகிறியது. கரண் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், பர்னெலின் ஓவர்களில் வாணவேடிக்கை காட்டிய பூரன் 15 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். நடப்பு தொடரில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பூரனும் (62 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), மாற்று வீரர் ஆயுஷ் பதோனியும் (30 ரன்) விக்கெட்டை பறிகொடுத்ததால் பதற்றமான சூழல் உருவானது.
கடைசி பந்தில் முடிவு
கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த லக்னோ அணி மார்க்வுட் (1 ரன்), ஜெய்தேவ் உனட்கட் (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளையும் தாரைவார்த்தது. இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை சந்தித்த அவேஷ்கான் பந்தை அடிக்க தவறினாலும் வேகமாக ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் தடுமாறி விட்டார். இல்லாவிட்டால் ரன்-அவுட் செய்து சமனில் முடித்திருக்கலாம். ஆனால் அதற்குள் லக்னோ ஒரு ரன் எடுத்து விட்டது.
லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.லக்னோஅணியின் அதிக பட்ச சேசிங் இதுதான். 4-வது லீக்கில் ஆடிய லக்னோவுக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு இது 2-வது தோல்வியாகும்.