ஐ.பி.எல்; ரசல் அதிரடி ஆட்டம் - கொல்கத்தா 208 ரன்கள் குவிப்பு


ஐ.பி.எல்; ரசல் அதிரடி ஆட்டம் - கொல்கத்தா 208 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @KKRiders

கொல்கத்தா அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ரசல் 64 ரன்கள் குவித்தார்.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நரைன் 2 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன், ஸ்ரேயஸ் ஐயர் 0 ரன், நிதிஷ் ராணா 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து பில் சால்ட்டுடன் ரமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ரமன்தீப் சிங் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சால்ட் அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய ரசல் 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி ஆட உள்ளது.


Next Story