இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!


தினத்தந்தி 14 Oct 2023 8:35 PM GMT (Updated: 15 Oct 2023 6:06 PM GMT)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது.

ஜெருசலேம்,

Live Updates

 • 14 Oct 2023 9:05 PM GMT

  காசாவில் இருக்கும் மக்கள் இடம்பெயர மறுத்து கோஷம்

  மக்கள் தங்களது உடைமைளை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தெற்கு காசா நோக்கி சென்று வருகின்றனர். வாகன வசதி இல்லாத பலர் நடைபயணமாகவே தெற்கு காசாவுக்கு செல்கின்றனர்.

  மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருவதால் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு செல்லும் சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

  அதே சமயம் வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் பலர் ‘எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது; அதற்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம்’ என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருவதை காண முடிகிறது.

  தாக்குதலில் 70 பேர் பலி

  இந்த வெளியேற்றம் காசா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதையும், ஹமாஸ் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

  ஆனால் தெற்கு காசாவுக்குச் செல்லும் சாலையில் பயணித்து கொண்டிருந்த லாரிகள் மற்றும் கார்களை இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தகர்த்ததாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் பலியானதாகவும் காசா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 • 14 Oct 2023 8:51 PM GMT

  காசாவில் உயிருக்கு பயந்து ஓடும் மக்கள்

  காசாவின் வடக்கு பகுதி போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம் அங்கு வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்தது.

  மக்கள் மொத்தமாக வெளியேறுவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. எச்சரித்தது. அதேபோல் இதை இஸ்ரேலில் உளவியல் போர் என விமர்சித்த ஹமாஸ் அமைப்பு மக்களை வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

  எனினும் இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்கிற அச்சத்தால் வடக்கு காசா மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

 • 14 Oct 2023 8:46 PM GMT

  காசா பகுதியில் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

  ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட சில பணயக்கைதிகளின் உடல்கள் காசாவிற்குள் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியது.

  இதுதொடர்பாக பேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர், “கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின்  சில உடல்களை நாங்கள் காசா பகுதியில் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

 • 14 Oct 2023 8:36 PM GMT

  4.23 லட்சம் மக்கள் வெளியேறினர்

  பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 7-ந்தேதி போர் வெடித்தது.

  அப்போது முதல் இஸ்ரேல் ராணுவம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இதில் காசா நகரம் பேரழிவை சந்தித்து வருகிறது.

  ஒருபுறம் போர் விமானங்கள் குண்டு மழை பொழிய, மறுபுறம் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் காசா மக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

  ஏற்கனவே உயிருக்கு பயந்து சுமார் 4.23 லட்சம் மக்கள் காசாவைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் ஐ.நா. ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


Next Story