இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு - முகமது ஷமி
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
புது டெல்லி,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது வரை 7 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தருகின்றன என கூறுவது மிகப்பெரிய தவறு என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகம் தான். இந்த விக்கெட்டில் ஒன்றும் இல்லை என்றால் நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை நிச்சயம் இங்கு பெற முடியும். இந்திய ஆடுகளங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை.
இங்கு நல்ல வேகத்தில், சரியான இடங்களில் பந்து வீசினால் போதும். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் நாங்கள் சிறிய அளவில் முன்னிலை பெற்றால் கூட நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.