'சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம்' - சூர்யகுமார் யாதவ் ருசிகர பேட்டி


சென்னை மைதானத்தில் சிக்சர் அடிப்பது கடினம் - சூர்யகுமார் யாதவ் ருசிகர பேட்டி
x

இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்ஸ் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி அவதாரமாக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அதில் '20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறந்த இன்னிங்ஸ் எது?' என்ற கேள்விக்கு, "கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக இன்னிங்சில் 31 பந்தில் 57 ரன்கள் எடுத்தேன். அணியும் வெற்றி பெற்றது. அது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு இன்னிங்ஸ்" என்று கூறினார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது யாருடைய ஷாட்டாக இருக்கும் என்ற கேள்விக்கு, 'ரோகித் சர்மா அடிக்கும் புல் ஷாட்' என்று பதிலளித்தார். அதேபோல் முட்டிப்போட்டு அடிக்கும் 'ஸ்வீப்' வகை ஷாட் தனக்கு மிகவும் பிடித்தமான ஷாட் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'கடந்த கால பந்து வீச்சாளர்களில் ஒருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதாக இருந்தால் அது யாருடையதாக இருக்கும்?' என்ற கேள்விக்கு, "முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)" என்று பதிலளித்தார்.

மேலும் அவர் இதுவரை விளையாடியதில் சிக்சர் விளாசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் எது? என்ற கேள்விக்கு, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் தான் சிக்சர் விளாசுவதற்கு தனக்கு மிகவும் கடினமாக இருந்த மைதானம் என்று சூர்யகுமார் கூறினார்.


Next Story