அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்த ஜடேஜா...புதிய வரலாற்று சாதனை!


அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்த ஜடேஜா...புதிய வரலாற்று சாதனை!
x

image courtesy; twitter/@BCCI

நடப்பு உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 410 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 411 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 47.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 54 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து அசத்தி வரும் ஜடேஜா இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற அனில் கும்ப்ளேவின் 27 வருட மற்றும் யுவராஜ் சிங்கின் 12 வருட சாதனையை ஜடேஜா உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

அந்த பட்டியல் விவரம் பின்வருமாறு;-

1. ரவீந்திர ஜடேஜா : 16 (2023)

2. அனில் கும்ப்ளே : 15 (1996)

2. யுவராஜ் சிங் : 15 (2011)

3. குல்தீப் யாதவ் : 14 (2023)

3. மணிந்தர் சிங் : 14 (1987)

இந்திய அணி அடுத்ததாக வரும் 15ஆம் தேதி அரையிறுதியில் நியூசிலாந்துடன் விளையாட உள்ளது.


Next Story