ஜெய்ஸ்வால் அச்சப்படாமல் சிறப்பாக ஆடினார் - ரோகித் சர்மா பாராட்டு


ஜெய்ஸ்வால் அச்சப்படாமல் சிறப்பாக ஆடினார் - ரோகித் சர்மா பாராட்டு
x

Image Courtesy: @BCCI

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டொமினிகா,

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன், கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஜெய்ஸ்வாலுக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் தயாராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் நமக்குக் காட்டினார். அவர் விவேகமாக பேட்டிங் செய்தார். போட்டியின் எந்த சமயத்திலும் அவர் அச்சம் அடையவில்லை.

பந்து வீச்சில் இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களை 150 ரன்களுக்கு வெளியேற்றுவது எங்களுக்கு சவாலாக அமைந்தது. பேட்டிங் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல.

நாங்கள் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். எனவே 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அதன்பின் வெளியேறி நன்றாக பந்து வீசினோம். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அஸ்வின் பந்துவீசியது மிகவும் சிறப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story