13 பந்தில் 50 ரன்: இந்த ஆட்டத்தை என் வாழ்நாளில் நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருப்பேன் - ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்தில் 50 ரன் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
கொல்கத்தா,
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 98 ரன்கள் குவித்து (நாட் அவுட்) வெற்றிக்கு வழிவகுத்தார். தொடக்கத்தில் மிக அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் (50 ரன்கள்) விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். இப்போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
போட்டிக்கு பின் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்த ஆட்டத்தை என் வாழ்நாளில் நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருப்பேன். இது மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது எனக்கு குறைவான நேரமே இருப்பதாக நான் உணர்ந்தேன். திடீரென அனைத்து பந்துகளும் சரியான இடத்தில் விழுவது போன்று எனக்கு தோன்றியது. நான் இப்படியே விளையாடவேண்டுமென நினைத்தேன். இது என் வாழ்நாளில் நினைவில் வைக்கக்கூடிய சிறந்த ஆட்டம்' என்றார்.