ஜாஸ் பட்லர் அதிரடி : குஜராத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்


ஜாஸ் பட்லர் அதிரடி : குஜராத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
x

Image Courtesy : Twitter @IPL 

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர்- யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் தயாள் பந்துவீச்சில் சாஹா-விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜாஸ் பட்லர் உடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். முதல் பந்து முதலே அதிரடி காட்ட தொடங்கினார் சாம்சன். பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சாம்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு பட்லர் உடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்த இந்த ஜோடியை கேப்டன் பாண்டியா பிரித்தார். படிக்கல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹெட்மயர் களமிறங்கினார். அதுவரை நிதானமாக ஆடி வந்த பட்லர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட தொடங்கினார். ஜாஸ் பட்லர் 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்புடன் குஜராத் அணி களமிறங்குகிறது.


Next Story