ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 19 Jan 2024 4:16 PM GMT (Updated: 19 Jan 2024 4:16 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜூவல் ஆண்ட்ரூ 130 ரன்கள் குவித்தார்.

போட்செப்ஸ்ட்ரூம்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது.

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் தொடக்க நாளான இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திவான் மரைஸ் 65 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக நாதன் சீலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனி வீரராக போராடிய ஜூவல் ஆண்ட்ரூ 130 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்கு மற்ற வீரர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

முடிவில் 40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 254 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக குவேனா மபகா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


Next Story