கபில் தேவ், அஸ்வின் வரிசையில்... சாதனை பட்டியலில் இடம்பிடித்த ஜடேஜா


கபில் தேவ், அஸ்வின் வரிசையில்... சாதனை பட்டியலில் இடம்பிடித்த ஜடேஜா
x

image courtesy; twitter/@BCCI

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா சதமடித்து அசத்தியுள்ளார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கில் ரன் எதுவும் அடிக்காமலும், படிதார் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ரோகித் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ரோகித் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா இந்த போட்டியில் அடித்த ரன்கள் மூலம் கபில் தேவ், அஸ்வின் வரிசையில் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை இந்த 3 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அந்த பட்டியல்;-

1. கபில் தேவ் - 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகள்

2. அஸ்வின் - 3271 ரன்கள் மற்றும் 499 விக்கெட்டுகள்

3. ஜடேஜா - 3003 ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகள்.


Next Story