தியோடர் கோப்பை கிரிக்கெட் போட்டி: வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்


தியோடர் கோப்பை கிரிக்கெட் போட்டி: வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்
x

தியோடர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

தியோடர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, வடகிழக்கு மண்டலம் ஆகிய 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான வடக்கு மண்டல அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கிய இடக்கை பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த மூவரும் இலங்கையில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் இளையோர் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் இந்த 3 வீரர்களும் தியோடர் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது.

இதேபோல் பிரியங்க் பன்சால் தலைமையிலான மேற்கு மண்டல அணியில் ஷிவம் துபே, பிரித்வி ஷா, சர்ப்ராஸ் கான், ராகுல் திரிபாதி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, சேத்தன் சகாரியா ஆகியோருக்கு மாற்று வீரர்கள் பட்டியலில் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தியோடர் கோப்பை போட்டிக்கான வடக்கு, மேற்கு மண்டல அணி வருமாறு:-

வடக்கு மண்டலம்: நிதிஷ் ராணா (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், ரோஹில்லா, எஸ்.காஜூரியா, மன்தீப் சிங், ஹிமான்ஷூ ராணா, விவ்ராந்த் ஷர்மா, நிஷாந்த் சிந்து, ரிஷி தவான், யுத்விர் சிங், சந்தீப் ஷர்மா, ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே.

மேற்கு மண்டலம்: பிரியங்க் பன்சால் (கேப்டன்), பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, ஹர்விக் தேசாய், ஹீத் பட்டேல், சர்ப்ராஸ் கான், அங்கித் பாவ்னே, சமார்த் வியாஸ், ஷிவம் துபே, அதித் சேத், பார்த் புட், ஷம்ஸ் முலானி, அர்ஜான் நவாஸ்வல்லா, சின்டான் கஜா, ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர்.


Next Story