நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டை கைப்பற்றிய கோலி, ரோகித்..!
இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் ஜொலித்தனர்.
பெங்களூரு,
உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. அத்துடன், லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் ஜொலித்தனர். இந்த ஆட்டத்தில் அனுபவ பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தாமல், ரோகித் சர்மா புதிய முயற்சியை கையில் எடுத்தார். குறிப்பாக, இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களான, சுப்மன் கில், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் பவுலிங் செய்தனர்.
அதிலும், விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 3 ஓவர்களை வீசிய விராட் கோலி, 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், தனது முதல் ஓவரை வீச வந்த கேப்டன் ரோகித் சர்மா, அதே ஓவரில் விக்கெட்டும் எடுத்தார். கில், சூர்யகுமார் ஆகியோர் தலா 2 ஓவர்களை வீசினர்.