உலகக்கோப்பை: சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ஆஸி. முன்னாள் கேப்டன் கணிப்பு..!!
ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
புது டெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி மற்றும் கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடி வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரிலேயே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
அவர் செய்வார் என்று நினைக்கிறேன். அவர் நிச்சயமாக 2 சதங்கள் அடிப்பார். அவர் 3 சதங்கள் அடிப்பாரா என்பது வேறு விஷயம். ஆனால், இந்தியாவில் உள்ள மைதானங்கள், விக்கெட்டுகள் மற்றும் அதிக ரன்களை எடுப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. யாருக்கு தெரியும், இது அவரது கடைசி உலகக்கோப்பையாக கூட இருக்கலாம். அவர் ஒரு வெற்றியாளர், அவர் தனக்கும் தனது அணிக்கும் வெற்றியை விரும்புகிறார். சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 47 சதங்களுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.