கடைசி டெஸ்ட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 311 ரன்கள் சேர்த்தது.
ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கர், மார்க்ராம் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் அமைத்தனர்.
ஸ்கோர் 76 ரன்னை எட்டிய போது டீன் எல்கர் 42 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய மார்க்ராம் (96 ரன்கள்) சதத்தை நெருங்கிய நிலையில் குடகேஷ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் பவுமா 28 ரன்னிலும், தாக்குப்பிடித்து ஆடிய டோனி டி ஜார்ஜி 85 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
நேற்றைய ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 89.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் 17 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ஜாசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது