இந்தியாவுக்கு எதிரான அந்த சாதனையை இம்முறையும் தொடருவோம் - தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்
1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
கேப்டவுண்,
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
இந்நிலையில் காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாதனையை இம்முறையும் தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு;-
"சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் களத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உலகின் வலுவான அணிக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற முயற்சிக்க உள்ளோம். மொத்தத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் எங்களின் பெருமைமிக்க சாதனையை தக்க வைத்து எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து திறமைகளும் தற்போதுள்ள அணிக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.