பாலியல் புகார் : கையில் லொகேசன் டிராக்கர்...! இலங்கை வீரருக்கு நிபந்தனை விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் !


பாலியல் புகார் : கையில் லொகேசன் டிராக்கர்...! இலங்கை வீரருக்கு நிபந்தனை விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் !
x

குணதிலகா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளில் அவர் 4 முறை குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார்.

சிட்னி

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன் இலங்கை அணி தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

எனினும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. என்னினும் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

குணதிலகாவும், 29 வயது பெண்ணும் ஒரு 'டேட்டிங் ஆப்' மூலமாக அறிமுகமாகி உள்ளனர். சில வாரங்களாக இருவரும் அதில் உரையாடி வந்தனர்.

கடந்த 2-ந் தேதி இரவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு பாரில் இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, சிட்னியின் ரோஸ் பே பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்வது என்றும், அங்கு பாலியல் உறவில் ஈடுபடுவது என்றும் இருவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்.

அதுபோல், அந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு படுக்கை அறையில் இருவருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. ஆணுறை அணிந்து பாலியல் உறவில் ஈடுபடுமாறு இளம்பெண் வற்புறுத்தினார்.

ஆனால், அதற்கு குணதிலகா மறுத்தார். இதனால் வாக்குவாதம் எழுந்தது. ஒருகட்டத்தில், குணதிலகா, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்தார். பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதைத்தொடர்ந்து, இளம்பெண் அளித்த புகாரின்பேரில், குணதிலகா நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குணதிலகா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளில் அவர் 4 முறை குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சக வீரர்களுடன் சேர்ந்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சுற்றிய குற்றச்சாட்டில் சிக்கி ஓராண்டு தடை நடவடிக்கைக்கு ஆளானார்.

மற்றொரு சமயம், இலங்கையில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு குணதிலகா சென்றிருந்தார். அங்கு ஒரு பெண்ணிடம் அவர் அத்துமீற முயன்றபோது அவரது கன்னத்தில் அப்பெண் அறைந்து விட்டார்.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நள்ளிரவு விருந்தில் கலந்து கொண்டதால், கிரிக்கெட் பயிற்சியை அவர் தவற விட்டார். அதற்காக அவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அது நடந்த சில மாதங்களில், கல்லுபிட்டியாவில் ஓட்டல் அறையில் ஒரு நார்வே பெண்ணை அவருடைய நண்பர் கற்பழித்த புகாரில் இவரது பெயரும் அடிபட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் 6 மாதம் தடை விதித்தது.

இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குற்றச்சாட்டுக்கு ஆளான தனுஷ்க குணதிலகா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமின் வழங்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 1,50,000 டாலர் ஜாமீன் வழங்குவதற்கும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததை உறுதிசெய்வதற்காக கண்காணிப்பு வளையம் அணிவதற்கும் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


Next Story