மஹ்முதுல்லா சதம் வீண்... வங்காளதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபாரவெற்றி.!


மஹ்முதுல்லா சதம் வீண்... வங்காளதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபாரவெற்றி.!
x
தினத்தந்தி 24 Oct 2023 10:09 PM IST (Updated: 24 Oct 2023 10:14 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

மும்பை,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசத்துடன் மும்பையில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அனுபவ வீரர் குயிண்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்சும் களமிறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ்12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் வான் டெர் டசன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து டி காக் மற்றும் கேப்டன் மார்க்ரம் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3-ம் விக்கெட்டுக்கு 131 ரன்களை திரட்டிய நிலையில் பிரிந்தது. நிதானமாக ஆடிவந்த மார்க்ரம், அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் டி காக்குடன் அதிரடி வீரர் கிளாசென் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிவந்த டி காக், சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த பின்னர் டி காக் அதிரடி காட்டினார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

டி காக் இரட்டை சதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்கள் எடுத்து (140 பந்து, 15 பவுண்டரி, 7 சிக்சர்) பவுண்டரி லைனில் கேட்சாகி ஆட்டமிழந்தார். டி காக்- கிளாசென் ஜோடி 4-ம் விக்கெட்டுக்கு 142 ரன்கள் திரட்டியது.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிவந்த கிளாசென், 49 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மில்லர் அதிரடியுடன், 34 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.

வங்காளதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், சொரிபுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஹசன் முஹ்மது 2 விக்கெட் எடுத்தார். இதனை தொடர்ந்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டான்சித் ஹசனும், லிட்டன் தாஸும் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சால் ஆரம்பம் முதலே வங்காளதேச பேட்ஸ்மேன்கள் தடுமாடினர். டான்சித் ஹசன் 12 ரன்களும், லிட்டன் தாஸ் 20 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். நஜ்முல் ஹசன் சாண்டோ, சந்தித்த முதல் பந்திலேயே கேட்சாகி வெளியேறினார்.

அனுபவ வீரர்களான முஷ்பிகூர் ரஹீம் 8 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்காளதேச அணி 58 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஒருபுறம் அனுபவ வீரர் மஹ்முதுல்லா தனி ஆளாக போராடினார். ஆனால் மறுபுறம் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் அடித்து அசத்தினார். ஆனால் அவரால் அணியை இலக்குக்கு அருகில் கூட கொண்டுசெல்லமுடியவில்லை. அவர் 111 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மஹ்முதுல்லாவின் அபார ஆட்டத்தால் வங்காளதேச அணி மிக மோசமான தோல்வியியை தவிரத்தது.

இறுதியில் வங்காளதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், ரபாடா, யான்சென், வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Next Story