டி20 உலகக் கோப்பை: தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து


டி20 உலகக் கோப்பை: தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து
x

Image Courtesy: AFP

டி20 உலகக் கோப்பையில் தனது சாதனையை முறியடித்த கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி காட்டிய விராட் கோலி நேற்றைய போட்டியிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தை தொடர்ந்தார். நேற்றைய போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்த கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே-வை (1016 ரன்கள்- 31 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். டி20 உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ரன்கள் அடித்துள்ளார். தற்போது ஜெயவர்தனே 2-வது இடத்தில் (1016 ரன்கள்- 31 போட்டிகள்) உள்ளார்.

இந்த நிலையில் தனது சாதனையை முறியடித்த கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். எப்போதாவது யாரோ ஒருவர் என் சாதனையை முறியடிக்கப் போகிறார்கள். அதை நீங்கள் (கோலி) செய்து உள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் போராட்ட குணத்தை வெளிபடுத்தி இருக்கிறீர்கள். 'பார்ம்' தற்காலிகமானது ஆனால் உங்கள் 'கிளாஸ்' நிரந்தரமானது" என தெரிவித்துள்ளார்.


Next Story