சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
முசாபர்நகர்,
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2020-ம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு இறுதியில் புறப்பட்டார்.
இந்நிலையில், பஞ்சாப்பின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் திடீரென புகுந்து கொள்ளைக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா உயிரிழந்து உள்ளார். மற்ற 4 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால், கொல்லப்பட்டவர் ரெய்னாவின் மாமாதான் என உறுதிப்படுத்தி உள்ளார். சம்பவம் நடந்தபொழுது, வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி விட்டு பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர் என கூறினர்.
இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி (வயது 80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் காயமடைந்து உள்ளனர். இவர்களில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தில், அசோக் குமாரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பி விட கூடாது என்று ரெய்னா டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்த நிலையில், சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், கொலைகாரர் ரஷீத் என்ற சிப்பாஹியா என தெரிய வந்தது. அவரது தலைக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி பதுனா நகர டி.எஸ்.பி. வினய் குமார் கவுதம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரஷீத் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. மொராதாபாத் நகரில் பதுங்கி இருந்த அவர், அடுத்த குற்ற செயலில் ஈடுபடுவதற்காக முசாபர்நகர் வந்து உள்ளார் என கூறியுள்ளார்.
இதுபற்றிய ரகசிய தகவல் போலீசாருக்கு தெரிந்து உள்ளது. முசாபர்நகர் எஸ்.எஸ்.பி. சஞ்சீவ் சுமன் கூறும்போது, ரஷீத் தனது கூட்டாளியுடன் பைக் ஒன்றில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரண்டு பேரும் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில் காவல் உயரதிகாரி பப்லு குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில், ரஷீத் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அவருடன் வந்த கூட்டாளி தப்பி ஓடி விட்டார். முசாபர்நகரில் கொலை முயற்சி வழக்கு ஒன்றிலும் ரஷீத் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.