வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி தான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் - இந்திய வீரர் குறித்து வாசிம் ஜாபர் கருத்து


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி தான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் - இந்திய வீரர் குறித்து வாசிம் ஜாபர் கருத்து
x

Image Courtesy: AFP

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியே சூர்யகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சூர்யகுமார் யாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெறுவார். ஆனால் அதுதான் அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டால் சூர்யகுமார் யாதவால் அணியில் நீடிக்க முடியாது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அதிக ஆபத்தான வகையில் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்திற்கும் பவுண்டரியை எதிர்நோக்கி விளையாடுகிறார். ஒருநாள் போட்டியில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தால் எளிதாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

50 ஓவர் கிரிக்கெட்டில், நீங்கள் ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை எளிதாக இழந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்கதை

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணியில் இடம் பிடிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ள சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் எடுக்க தடுமாறி வருகிறார்.


Next Story