'வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்; யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும்' - டிராவிட் கருத்து


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்; யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும் - டிராவிட் கருத்து
x

தொடக்க ஜோடிக்கு பிறகு விக்கெட்டுகளை மளமளவென இழந்து விட்டோம் என ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

பிரிட்ஜ்டவுன்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) டிரினிடாட்டில் நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில், 'இது சிக்கலான ஆடுகளம் என்பது தெரியும். இங்கு பேட் செய்வது எளிதானது அல்ல. 230 அல்லது 240 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். தொடக்க ஜோடிக்கு பிறகு விக்கெட்டுகளை மளமளவென இழந்து விட்டோம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும். மிடில் வரிசையில் விக்கெட் வீழ்ச்சியால் 50-60 ரன்கள் குறைந்து போய் விட்டது' என்றார்.


Next Story