சச்சின், கோலி, தோனி இல்லை ...! உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!


சச்சின், கோலி, தோனி இல்லை ...!  உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!
x
தினத்தந்தி 7 July 2023 11:13 AM IST (Updated: 7 July 2023 11:29 AM IST)
t-max-icont-min-icon

சச்சின், கோலி, தோனி, சேவாக் போன்றோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தால், சமர்ஜித் சிங் வாரிசாக ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் கிடைத்து உள்ளன.

மும்பை

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு சமீபத்தில் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது தெரிந்ததே. தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் கோலிதான் பணக்கார வீரர் என்பதில் சந்தேகமில்லை.

ஏ பிளஸ் கிரேடு ஒப்பந்தத்தில் உள்ள விராட், பிசிசிஐ-யிடமிருந்து ஆண்டுக்கு ரூ.7 கோடி பெறுகிறார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டியில் விளையாட ரூ.6 லட்சமும், 20 ஓவர் போட்டியில் விளையாட ரூ.3 லட்சமும் கோலிக்கு வழங்கப்படுகிறது.

ஐபிஎல் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு அணியிடம் இருந்து ரூ.15 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். இது தவிர, விளம்பரங்கள் மற்றும் வணிகங்கள் மூலம் கோலி பெரும் தொகையை சம்பாதிக்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.1250 கோடி, மகேந்திர சிங் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1040 கோடி.

சச்சினும் தோனியும் விளம்பரங்கள் மூலம் பெரும் தொகையை சம்பாதித்துள்ளனர். இந்த மூன்று வீரர்களின் நிகர மதிப்பைப் பார்க்கும்போது, இந்திய கிரிக்கெட்டின் பணக்கார வீரர்கள் இவர்கள்தான் என்று நினைக்கலாம்.

ஆனால் இந்த மூவரைத் தவிர இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு பணக்காரர் இருக்கிறார். அவர்தான் சமர்ஜித்சிங் ரஞ்சித் சிங் கெய்க்வாட். இவர் 25 ஏப்ரல் 1967 இல் பிறந்தார். அவர் முதல் தர வீரராக அங்கீகரிக்கப்பட்டார். ரஞ்சித் சின் பிரதாப் சின் கெய்க்வாட், சுபாங்கினிராஜாவின் ஒரே மகன் சமர்ஜித் சிங். பரோடாவின் அரசராகவும் இருந்தார்.

அவர் ரஞ்சி டிராபியில் பரோடாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆறு முதல்தர போட்டிகளில் விளையாடி உள்ளார். பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்து உள்ளார்.

சமர்ஜித் சிங் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் படித்தார். 2012 இல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ரூ.20 ஆயிரம் கோடி சொத்துக்கள் கிடைத்தன. சமர்ஜித் உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் உரிமையாளரும் ஆவார். குஜராத் மற்றும் வாரணாசியில் 17 கோவில்களை நடத்தும் கோவில் அறக்கட்டளைகளின் பொறுப்புகளை அவர் மேற்பார்வையிடுகிறார்.

சமர்ஜித் சிங் கெய்க்வாட் வான்கனிர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராதிகாராஜை மணந்தார்.

சச்சின், கோலி, தோனி, சேவாக் போன்றோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தால், சமர்ஜித் சிங் வாரிசாக ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் கிடைத்து உள்ளன. இதன் மூலம் நம் நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.


Next Story