கோடி கோடியாக பணம் சம்பாதித்தும் விவசாயியாக மாறியது ஏன்..? எம்.எஸ்.தோனியின் அசத்தல் விளக்கம்
எம்.எஸ்.தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார்.
ராஞ்சி,
கிரிக்கெட்டில் முத்திரை பதித்து ரசிகர்களின் இதயங்களில் 'தல'யாக வீற்றிருக்கும் எம்.எஸ்.தோனி, ஒரு விவசாயியாக தனது பணியை தொடர்ந்து செய்கிறார். கிரிக்கெட் வீரர், வழிகாட்டி, தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் இருந்தாலும் தன்னை விவசாயி என காட்டிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
2020 ஆம் ஆண்டில் அவர் முழுநேர விவசாயியாக மாறினார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார்.
இந்நிலையில் தோனி திடீரென விவசாயி ஆனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஒரு வீடியோ நேர்காணலில் விளக்கமாக கூறியிருக்கிறார்.
பயிர்கள் விளைவிப்பதில் இருந்த ஆர்வம் மற்றும் கொரோனா தொற்று பரவிய காலத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆகியவை தன்னை விவசாயம் செய்ய தூண்டியதாக குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:-
கொரோனா காலத்திற்கு முன்பே எங்கள் குடும்பத்தினர் குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்தனர். எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் முதலில் 4 முதல் 5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விவசாயத்தை மேலும் விரிவாக்கும் யோசனை வந்தது. முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன்.
பயிரை வளர்க்கும் செயல்முறை என்னை மிகவும் கவர்ந்தது. வெண்டைக் காயைப் பொருத்தவரை இரவில் நீங்கள் பார்க்கும் ஒரு காய் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால் அது முழு அளவில் வளர்ந்திருக்கும். இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் என்னை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மேலும் உற்சாகப்படுத்தியது. இவ்வாறு தோனி தெரிவித்தார்.