வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், இஷான் கிஷன்: பெங்களூருவை வீழ்த்திய மும்பை அணி


வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், இஷான் கிஷன்: பெங்களூருவை வீழ்த்திய மும்பை அணி
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது.

அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 3 ரன்களிலும், அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் - டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ் 61 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 197 ரன்கள் இலக்குடன் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில் இஷான் கிஷன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 34 பந்துகளில் 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 38 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமாருடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 19 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 21 (6) ரன்களும், திலக் வர்மா 16 (10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் ஆகாஷ் தீப், வைஷாக் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.


Next Story