கோலி, ரோகித் அல்ல...உலகக்கோப்பை தொடரில் இவர் தான் இந்தியாவின் மிக முக்கிய வீரராக இருப்பார் - வாசிம் ஜாபர்


கோலி, ரோகித் அல்ல...உலகக்கோப்பை தொடரில் இவர் தான் இந்தியாவின் மிக முக்கிய வீரராக இருப்பார் - வாசிம் ஜாபர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 9 Sep 2023 5:02 AM GMT (Updated: 9 Sep 2023 5:09 AM GMT)

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் அணித்தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அணியில் இடம் பெறாத வீரர்கள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா மிக முக்கிய வீரராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாண்ட்யா எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாகவே அவர் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி உள்ளார். அதுமட்டுமின்றி 12 ஆண்டுகள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருக்கும் இந்திய அணிக்கு அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கை கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் போது யுவராஜ் சிங் எவ்வாறு கை கொடுத்தாரோ அதேபோன்று பாண்ட்யா இம்முறை ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுப்பார். எனவே என்னை பொறுத்தவரை இந்திய அணியின் முக்கிய வீரராக உலகக்கோப்பையில் பாண்ட்யா திகழ்வார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story