உம்ரான் மாதிரி அல்ல...மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் - சேவாக் கருத்து


உம்ரான் மாதிரி அல்ல...மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் - சேவாக் கருத்து
x

Image Courtesy: AFP  

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக லோம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மயங்க் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த பஞ்சாப் - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது லக்னோ அணியில் அறிமுகமாகிய மயங்க் யாதவ் அந்த போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆரம்பம் முதலே 145 - 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாடுவதே என்னுடைய இலக்கு என கூறியுள்ளார்.

அதிவேகமாக பந்துவீசு எதிரணி வீரர்களை திணறடிக்கும் மயங்க் யாதவை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்தியா தங்களுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் இதே வேகத்தில் பந்து வீசி இந்தியாவுக்காக அறிமுகமான உம்ரான் மாலிக் சரியான லைன் மற்றும் லென்த்தை பின்பற்றவில்லை ஆனால், மயங்க் யாதவ் வேகத்துடன் விவேகத்தையும் பின்பற்றுவதால் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உம்ரான் மாலிக்கும் வேகமாக வீசினார். ஆனால் அவரால் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் முன்னேற்றத்தை காண முடியவில்லை. மறுபுறம் மயங்க் யாதவின் லைன் மற்றும் லென்த் மிகவும் துல்லியமாக இருக்கிறது.

அதே சமயம் அதிரடியான வேகத்தை கொண்டுள்ள நாம் லைனில் கொஞ்சம் தவறு செய்தாலும் பவுண்டரிகளை கொடுப்போம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அந்த ஒரு விஷயத்துக்காகவே ஐ.பி.எல் தொடர் முடிந்த பின்பும் அவர் பிட்டாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story