ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோலி பின்னடைவு - டி20யில் இஷான் கிஷன் அசத்தல் - அதிரடி மாற்றங்கள் ..!!

Image Courtesy : AFP
3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
துபாய்,
3 வடிவிலான சர்வேதச கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் நீடிக்கிறார். 4-வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார். அதே போல் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் இந்திய அணியின் பும்ரா (5-வது இடம் ) மட்டும் முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் லபுசேன் உள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணியின் அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். 3-வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜா முதல் இடத்தை தக்கவைத்து கொண்டார். 2-வது இடத்தில் அஸ்வின் ஆதிக்கம் செலுத்துகிறார்.
20 ஓவர் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் இஷான் கிஷன் 7-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். முதல் இடத்தில் பாபர் அசாம் நீடிக்கிறார். 20 ஓவர் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை.






