'எங்கள் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது' - பஞ்சாப் கேப்டன் தவான் பேட்டி


எங்கள் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது - பஞ்சாப் கேப்டன் தவான் பேட்டி
x

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்தார்.

கவுகாத்தி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் (60 ரன்கள்), கேப்டன் ஷிகர் தவான் (86 ரன்கள்) அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களில் போராடி அடங்கியது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அளித்த பேட்டியில், 'ராஜஸ்தான் அணியினர் நன்றாக பந்து வீசினர். நாங்கள் எடுத்த ஸ்கோர் (197 ரன்கள்) எனக்கு மகிழ்ச்சி அளித்தது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தனர். நாதன் எலிஸ் நேர்த்தியாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்தார்.

நாங்கள் ஒருபோதும் ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து நழுவவிடவில்லை. சில தருணங்கள் எங்களுக்கு கடினமாக இருந்தது. மொத்தத்தில் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்த சீசனை அருமையாக தொடங்கியுள்ளோம். நான் அதிரடியாக ஆடி ஸ்டிரைக் ரேட்டை உயர்த்தி இருக்கிறேன். இந்த ஆண்டு எங்களது பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. இதனால் இதே உத்வேகத்துடன், ஆக்ரோஷமாக தொடர்ந்து விளையாட விரும்புகிறோம்' என்றார்.


Next Story