"மக்கள் என்னை அதிர்ஷ்டம் குறைவான வீரர் என்று கூறுகிறார்கள்"- சஞ்சு சாம்சன்
சாம்சன் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரு அரை சதை மட்டுமே அடித்ததால் இந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
புதுடெல்லி,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆனால் இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார்.
அந்த வகையில் சாம்சன் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரு அரை சதை மட்டுமே அடித்ததால் இந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால் உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது 2-வது தர இந்திய அணி விளையாடும் இந்த தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு அதிர்ஷ்டமில்லை என்று தெரிவிக்கும் நிறைய ரசிகர்கள் வழக்கம் போல தேர்வுக் குழுவை விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அனைவரும் தம்மை அதிர்ஷ்டமற்ற வீரர் என்று சொன்னாலும் தாம் நினைத்ததை விட கிரிக்கெட்டில் போதுமானவற்றை சாதித்துள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "மக்கள் அனைவரும் என்னை அதிர்ஷ்டமற்ற கிரிக்கெட்டர் என்று அழைக்கிறார்கள். ஆனால் தற்போது நான் அடைந்துள்ள இடம் நினைத்ததை விட அதிகமாக உள்ளது. மேலும் ரோகித் சர்மாதான் எப்போதும் என்னிடம் முதலாவதாக அல்லது இரண்டாவதாக பேசும் நபராக இருப்பார். ஐபிஎல் தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். மும்பை அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தீர்கள். நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தீர்கள் என்று ரோகித் என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் அவர் எனக்கு நிறைய ஆதரவை கொடுத்து வருகிறார்" என்று கூறினார்.