பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் அவதி


பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் அவதி
x

ஷிகர் தவான் இல்லாத சமயத்தில் சாம் கரன் கேப்டன் பணியை கவனிப்பார்

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முல்லாப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 148 ரன் இலக்கை ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ராஜஸ்தான் வீரர் ஹெட்மயர் (27 ரன், 10 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் இருந்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் சாம் கர்ரன் கேப்டன் பொறுப்பை கவனித்தார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஷிகர் தவான் அடுத்து வரும் மும்பை (18-ந் தேதி) மற்றும் குஜராத் (21-ந் தேதி) அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களிலும் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

இது குறித்து ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பஞ்சாப் அணியின் கிரிக்கெட் மேம்பாட்டு தலைவர் சஞ்சய் பாங்கர் அளித்த பேட்டியில்,

'ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியதிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முக்கியமான தொடக்க வீரரான அவர் ஆடமுடியாமல் போனது எங்களுக்கு பெரிய இழப்பாகும். தற்போது அவரால் குறைந்தபட்சம் 7-10 நாட்கள் விளையாட முடியாது. கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த அனுபவம் கொண்ட சாம் கரன், ஷிகர் தவான் இல்லாத சமயத்தில் கேப்டன் பணியை கவனிப்பார். என்றார்.


Next Story